
புதுமைவாணன் எனும் புனைபெயரிலேயே கவிதைகள்சிறுகதைகள் எழுதி வரும் பாண்டிருப்பை சொந்த இடமாகக் கொண்ட கந்தசாமி டணிஸ்கரன்
; நிதி நிறுவணம் ஒன்றில் கணக்காளராக கடமை ஆற்றிக்கொண்டு அகரம் அமைப்பினால் வெளிவருகின்ற மணிப்புறா சஞ்சிகையின் ஆசிரியராகவும் ,கல்முனைத் தமிழ் சங்கம் வெளியிட இருக்கும் பொதிகை காலாண்டு இதழின் ஆசிரியராகவும் தனது இலக்கிய பங்களிப்பை தமிழுக்கும் சமூகத்திற்குமாக மேற்கொண்டுவருகிறார்.வீரகேசாரி தினக்குரல் போன்ற தேசிய பத்திரிகைகளிலும் செங்கதிர்,கவிஞன், கதிரவன், மணிப்புறா, கிழக்கு மண் மற்றும் மித்திரன் போன்ற சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள், சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவர் ஆரம்ப காலங்களில் உலகத் தமிழர்களை இணைக்கும் தமிழ் நண்பர்கள் எனும் தளத்தில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என தனது படைப்புக்களையெலாம் பதிந்து பரவலான வாசகர்களையும் விமர்சகர்களையும் தன்பால் ஈர்த்துக்கொண்டவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கெடுக்கும் இத்தளத்தில் மாதா மாதம் அதிகம் வாக்குகளைப் பெறுவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுள் இதுவரை இவரது எட்டுக் கவிதைகள் சிறந்த கவிதைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு தளத்தால் தொகுக்கப்டும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. இது இந்தியாவில் இருந்து செயற்படுகின்ற வலைத்தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ல் வெளிவந்த விமோசணம் எனும் குறுந்திரைப்படம் மூலமாக சிறந்த நடிகராகவும் தனது ஆளுமையை வெளிப்படுத்தியிருந்த புதுமைவாணன் கவியரங்குகள், அகரம் சமூக அமையம் முன்னெடுக்கும் இலக்கிய நிகழ்வுகள் மற்றும் மாணவர்களுக்கான இலக்கியப் பயிற்சிப் பட்றைகள் என மு.சடாட்சரன் போன்ற மூத்த கவிஞர்களோடு இணைந்தும், செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் அன்மைக் காலமாக ஆண்டுதோறும் இடம்பெற்றுவரும் கண்ணகி கலை இலக்கிய கூடலின் செயற்குழு உறுப்பினர் என பல தளங்களிலும் இயங்கிவருகின்ற இளம் எழுத்தாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
இவ் இளம் கவிஞனின் கவிதைகளில் குறீயிடுகள் படிமங்கள் புனைவுகள் என நவீனத்துவம் சார்ந்து சிறப்போடு கையாளப்பட்டிருப்பதனை இவரது கவிதைகளை படிக்கும் வாசகர்கள் உணர முடியும். விரைவில் இவரது கவிதைகள் “தனிமையின் சுவர்கள்” என்ற பெயரிலும் சிறுகதைத் தொகுப்பு “சிறகுடைத்தல்” எனும் தலைப்பிலும் வெளிவர இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
நினைவோவியம்
என்னைச் சுருட்டி
எனக்குள் நானானது சிறு புழு.
அச்சிறு புழுவுக்கு
இரையாக
என்னைக் கொடுத்தேன்.
இரவையும், பகலையும்
பழகிடக் கொடுத்தேன்.
சிறகு முளைத்த புழு
பலவர்ணம் போர்த்திப்
பறக்கின்றது.
இப்போது
என்னைத் தேடுகின்றேன்….
சுருட்டப்பட்டவனை
காற்று திறக்கின்றது.
எண்ணற்ற துளைகள் என்னில்
ஒவ்வொரு துளையிலும்
ஓராயிரம் நினைவுகளை
ஓவியமாக்கியிருக்கின்றது புழு
க.டணிஸ்கரன்

No comments:
Post a Comment