Latest News

கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது: சம்பந்தன் குழுவிடம் மைத்திரி, ரணில் தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விவகாரம் சூடுபிடித்துள்ள இத்தருணத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேற்று மாலை தனித்தனியாக இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்திலும், பிரதமருடனான சந்திப்பு அலரி மாளிகையிலும் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறுபான்மையினரைப் பெரும்பான்மை இனமாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர்.
அதேவேளை, கிழக்கு மாகாணசபையில் தற்போது அங்கம் வகிக்கும் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியாகத் திகழ்கின்றது.
எனவே, கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நாம் இன்று தெளிவாக எடுத்துரைத்தோம்.
நாம் முன்வைத்த கருத்துகள் நியாயமானது என்று ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் எம்மிடம் கூறினர்.
எனவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்மை ஆதரிக்க முன்வரவேண்டும். அவ்வாறு முன்வந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அரவணைத்துக் கொண்டு கிழக்கு மாகாணசபையில் நாம் ஆட்சியமைப்போம்.
கடந்த காலத்தில் விட்ட தவறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனிமேலும் விடக்கூடாது. கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் உள்ளோம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.