எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது.
கட்டண குறைப்பு தொடர்பில் பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, தீர்மானம் எடுக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
அத்துடன், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள், வேன்களின் கட்டணங்களை குறைப்பது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால் தனியார் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு இணங்கியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
பஸ் கட்டண சூத்திரத்திற்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
பஸ் கட்டண குறைப்பு தொடர்பில் இன்று மதியம் அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் வழங்கியுள்ள எரிபொருள் விலைக் குறைப்பின் பலன்களை பயணிகளுக்கும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கூறினார்.
இறுதியாக 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பொது மக்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால், அதன் பயன்களை பயணிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

No comments:
Post a Comment