சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆள் இல்லாத குட்டி விமானம் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானத்தை பறக்க விட்ட கிறிஸ்தவ பாடகர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பட்டினபாக்கம் எம்.ஆர்.சி.நகர் சத்யதேவ் அவெனியூவில் சோமர்செட் கிரீன்வேய்ஸ் என்ற பெயரில் ஆடம்பர சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 10 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் நீச்சல்குளம் உள்ளது. நட்சத்திர ஓட்டலைப்போன்று காணப்படும் இந்த குடியிருப்பில், வசதி படைத்தவர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் குளித்து விட்டு சூரிய ஒளிபடும்படி தரையில் படுத்திருந்தனர்.
ஆள் இல்லாத குட்டி விமானம்
அப்போது ஆள் இல்லாத சிறிய ரக குட்டி விமானம் ஒன்று வானத்தில் இருந்து அருகில் விழுந்தது. இதைப்பார்த்து சுற்றுலா பயணிகள் பதறி ஓடினார்கள். அந்த குட்டி விமானம் வீடியோ கேமரா பொருத்தப்பட்ட விமானம் ஆகும். பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. சுமார் 2லு அடி நீளம் உடையது. 3 கிலோ எடை உள்ளது.
வானத்தில் ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து தரையில் உள்ள காட்சிகளை இந்த விமானத்தில் உள்ள வீடியோ கேமரா படம் பிடிக்கும் வசதி கொண்டது. வானத்தில் பறந்து இந்த ஆள் இல்லாத கேமரா விமானம் படம் பிடிக்கும் காட்சிகளை, தரையில் இருந்தபடி பதிவு செய்யலாம். டி.வி.மானிட்டரிலும் பார்க்கலாம். ரிமோட் மூலம் இந்த விமானத்தை இயக்கலாம். இங்கிலாந்து நாட்டில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டது ஆகும்.
யாரோ நபர்கள் இந்த ஆள் இல்லாத விமானத்தை வானத்தில் பறக்கவிட்டு படம் பிடிக்க ஏற்பாடு செய்திருக்கலாம் என்று கருதி அந்த விமானத்தை, அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு அதிகாரி சஞ்சீவ்குமார் பட்டினபாக்கம் போலீசில் ஒப்படைத்தார்.
இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், மைலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் ரவிசேகர் ஆகியோர் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.
பறக்கவிட்டவர் கைது
விசாரணையில் அந்த குட்டி விமானத்தை பறக்கவிட்டவர் யார்? என்று நேற்று மாலை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது பெயர் ராஜ் (வயது 29). சென்னை மைலாப்பூர் கல்வாரி தெருவில் வசிக்கிறார். கிறிஸ்தவ பாடல்களை கிறிஸ்தவ ஆலயங்களில் பாடும் பாடகர். இவர் மைலாப்பூரில் உள்ள கிறிஸ்தவ ஆலய நிகழ்ச்சிகளை வானத்தில் இருந்து படம் பிடிக்க, இந்த குட்டி கேமரா விமானத்தை மும்பையில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ரூ.85 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.
நேற்று முன்தினம் இந்த விமானத்தை பரீட்ச்சார்த்த முறையில் வானத்தில் பறக்கவிட்டு படம் பிடிக்க சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது விமானத்தின் ரிமோட்டை சரியாக இயக்க தெரியாததால், அது ரிமோட் கட்டுப்பாட்டை இழந்து பறந்து இறுதியில் மேற்கண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் மாடியில் விழுந்துவிட்டது. கவனக்குறைவாக இதுபோல் ஆள் இல்லாத விமானத்தை பறக்கவிட்ட குற்றத்திற்காக ராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
3 சட்டப்பிரிவுகளில் வழக்கு
ராஜ் மீது அனுமதி இல்லாமல் விமானத்தை பறக்கவிட்டது, பொதுமக்களை அச்சுறுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக விமானத்தை இயக்கியதுபோன்ற குற்றச்சாட்டுகளில், இ.பி.கோ.336, 287, 188 போன்ற சட்டப்பிரிவுகளிலும், விமானபோக்குவரத்து சட்டப்பிரிவு 11-ன் கீழும் போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ராஜ் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
No comments:
Post a Comment